இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்ளும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டில் முதல்முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தத் தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நேற்று ஆற்றிய உரையில் புலிகளுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தடையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.
இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ நல்லுறவை வளர்த்துக் கொள்ள விரும்புவதாக பிரபாகரன் ஆற்றிய மாவீரர்கள் உரையில் கூறியிருந்தார்.
புலிகள் அமைப்பிற்கு தடை விதித்து இந்தியா முதலில் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அந்த அமைப்பிற்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.