கிழக்கு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்தச் சிறிலங்கா அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியா இயக்குநர் பிராட் ஆடம்ஸ் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் கிழக்கில் படுகொலைகள், கடத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
நாங்கள் நடத்திய விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக 30 படுகொலைகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சிறிலங்காக் காவல்துறையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் கடற்கரையில் துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்களில் சித்ரவதைக்கான அடையாளங்களும் உள்ளன.
இதற்கிடையில், கொல்லப்பட்ட இருவரும் சாதாரண உடைகளில் வந்தவர்களால் காவல் நிலையத்தில் இருந்து நள்ளிரவு நேரத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரிகோணமலையில் உள்ள கோணேஸ்வரர் ஆலயத்தின் தலைமைக் குரு பலத்த பாதுகாப்பிற்கிடையில் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களைத் துணை ராணுவக் குழுவினர் கடத்திச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அரசின் உதவிடன்தான் இந்த மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என்று கிழக்கு மாகாண மக்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார்.