அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவின் தலைமையில் அமையும் புதிய அரசிலும், பென்டகன் தலைவர் பதவியில் ராபர்ட் கேட்ஸ் தொடர்ந்து செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வரும் வியாழனன்று நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஒபாமா பங்கேற்கிறார். பென்டகன் தலைவர் பதவியில் ராபர்ட் கேட்ஸ் தொடர்ந்து நீடிப்பது குறித்த அறிவிப்பை அப்போது ஒபாமா வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் படிப்படிப்பாக திரும்பப் பெறப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது ஒபாமா அறிவித்திருந்தார். அதனை நிறைவேற்றுவதற்கு ராபர்ட் கேட்ஸ் தகுதியானர்வர் என்பதால், ஒபாமா ஆட்சியில் அடுத்த ஓராண்டு வரை ராபர்ட் கேட்ஸ் தனது பதவியில் தொடருவார் என்று பொலிடிகோ (Politico) என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் அமெரிக்காவின் முன்னாள் அயலுறவு கொள்கை ஆலோசகரான சூஸன் ரைஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராகவும், ஓய்வுபெற்ற அட்மிரல் டென்னிஸ் பிளேர் அந்நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனராகவும் நியமிக்கப்படலாம் என பொலிடிகோ இணையம் தெரிவித்துள்ளது.