மும்பை புறநகர் ரயிலில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான ரஹில் ஷேக் லண்டனில் இன்டர்போல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட 7 தொடர் குண்டு வெடிப்புகளில் 187 பேர் பலியானார்கள். 817 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பையில் நடந்த இந்த பயங்கரவாத செயலுக்கு நிதியுதவி ஏற்பாடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ரஷில் ஷேக் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தான். இவனைப் பற்றிய தகவல்கள் சர்வதேச காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரஷில் ஷேக் லண்டனில் சர்வதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். இதுபற்றிய தகவல் டெல்லி மத்திய புலனாய்வுக் கழகத்துக்கு (சி.பி.ஐ.) தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ., மும்பை காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு ஷேக் கைது செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.