சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இன்னும் 18 மாதத்தில் தீர்வு காணப்படும் என ஆசிய பசிபிக் நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நேற்று நடந்த ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் புஷ், ஆஸ்ட்ரேலிய பிரதமர் கெவின் ரூட், ஜப்பான் பிரதமர் டாரோ உட்பட 21 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை தாங்கள் உணர்ந்துள்ளதாகவும், அதனை சீரமைக்க வேகமாக செயல்பட்டு வருவதாகவும், இன்னும் 18 மாதங்களில் அதற்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் ஆசிய பசிபிக் நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக வர்த்தக அமைப்புடன் அடுத்த மாதம் டோஹாவில் நடைபெற உள்ள பல்வேறு சுற்றுப் பேச்சுகளின் போது பொருளாதார நெருக்கடியை முடிவக்கு கொண்டு வருவதற்கான திட்டங்களை தீட்டுவதில் முனைப்புடன் செயல்படுவோம் என்றும் தலைவர்கள் கூறியுள்ளனர்.