அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என தாய்லாந்து பிரதமர் சோம்சாய் வோங்சவாட் தெரிவித்துள்ளார்.
பெரு தலைநகர் லிமாவில் நேற்று நடந்த பசிபிக் ஆசிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற போது பேசிய சோம்சாய், தாம் ஜனநாயக முறைப்படி அந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனவே, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அடிபணிந்து பதவி விலக மாட்டேன் என்றார்.
ஒரு அரசு பதவி நீக்கப்பட்ட வேண்டுமென்றால் அது நாடாளுமன்றத் தேர்தல் அல்லது வாக்குப்பதிவின் மூலம் மக்களால்தான் நடக்க வேண்டும், போராட்டம் வாயிலாக அல்ல என விளக்கினார்.
இப்பிரச்சனையில் ராணுவம் தலையிட்டு ஆட்சியைப் பிடிக்குமா என்ற கேள்விக்கு, இதற்கு ராணுவத் தரப்பில் இருந்து பலமுறை பதிலளிக்கப்பட்டுள்ளது. அரசியல் விவகாரங்களில் தலையிட்டு ஆட்சியை பிடிக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபடாது என பதிலளித்தார்.
நாடாளுமன்றம் முற்றுகை... தள்ளிவைப்பு: இதற்கிடையில், பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தாக்-ஷினின் கைப்பாவையாக சோம்சாய் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி போராடி வரும் ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி அமைப்பினர் இன்று காலை அந்நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி கண்டனப் பேரணி நடத்தினர்.
சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கண்டன பேரணியில் பங்கேற்று நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டனர். எனினும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கலவர தடுப்பு காவல்துறையினர் அவர்களை நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.
மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த எம்.பி.க்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற வானொலியில் பேசிய சபாநாயகர் சாய் சிட்சோப், இன்றைய கூட்டத்தை நடத்த முடியாத சூழல் நிலவுவதால் கூட்டத்தை ரத்து செய்கிறேன். சூழல் சாதகமாக நிலவும் சமயத்தில் மீண்டும் கூட்டம் நடைபெறும் என்றார்.