இலங்கையில் கடும் மழை, வெள்ளத்திற்கிடையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 43 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பூநகரி- பரந்தான் சாலையில் உள்ள நல்லூரில் நடந்த கடும் மோதலில் 43 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 70க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர் என்று அவர்களின் ஆதரவு இணைய தளமான தமிழ்நெட்.காம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடும் மழை, வெள்ளத்திற்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இரண்டு தரப்பிற்கும் இடையில் கடும் மோதல் நடந்ததாகவும், இதன் இறுதியில் சிறிலங்காப் படைகள் பூநகரியை நோக்கித் தள்ளப்பட்டதாகவும், கொல்லப்பட்டுள்ள படையினரின் சடலங்களில் 8-ஐத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் சிறிலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலினால் இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை சிறிலங்காப் படையினர் தொடர்ந்து தடுத்து வருவதால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்காலிகத் தங்குமிடங்கள் கூட இல்லாமல் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருவதாகவும் தமிழ்நெட் செய்தி கூறுகிறது.