பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் உயிர் இழந்திருக்கக்கூடும் என அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு வசிரிஸ்தானில் உள்ள அலி-கேல் நகரில் இன்று நடந்துள்ள இத்தாக்குதலில், அப்பகுதி உள்ளூர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த படைத் தளபதியின் வீடு சேதம் அடைந்ததாகவும், அதில் அயல்நாட்டவர்களும் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், புலனாய்வுத்துறை ஊழியர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை ஊடகத்திற்கு அளிக்கும் உரிமை தங்களுக்கு இல்லை என்பதால், தங்களது பெயர் வெளியாவதை அவர்கள் விரும்பவில்லை.
கடந்த புதனன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் நாட்டின் இறையாண்மையை பாதிப்பதாக கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அரசு, தனது நாட்டுக்கான அமெரிக்கத் தூதரிடமும் இதுதொடர்பாகப் பேசிய நிலையில், இன்று மீண்டும் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் அமெரிக்காவின் நேச நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்றிருந்தாலும், தன் நாட்டின் எல்லையில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.