சுதந்திரம் பெற்றது முதல் மண்டல, இன ரீதியான கிளர்ச்சியை தொடர்ந்து சந்தித்து வந்தாலும், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என முடிவில் இந்தியா தீர்மானமாக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள “2025இல் சர்வதேசப் போக்கும் மாறிய உலகமும்” என்ற தலைப்பிலான ஆய்வு அறிக்கையில், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத குழுக்களின் நடவடிக்கைகளை ஒடுக்கும் முடிவில் புதுடெல்லி நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் வளர்ச்சியால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீவிர வன்முறை, நிலையற்ற தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளை இந்தியா சந்தித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் மண்டன, இன ரீதியான கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டாலும் அவற்றால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்த முடியாது.
வளர்ந்து வரும் நாடான சீனாவிடமும், அமெரிக்காவிடமும் அரசியல், கலாசாரத் துறையில் பாலமாக விளங்கும் வகையில் இந்திய அரசியல் தலைவர்கள் செயல்பட்டுள்ளனர்.
வெற்றிகரமான ஜனநாயக முறை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றால் இந்தியாவின் மீது சர்வதேச அரங்கில் நம்பிக்கை அதிகரித்துள்ளது, புதிய நாடுகளுடன் இந்தியா தற்போது கூட்டு ஏற்படுத்திக் கொள்ள அது ஏதுவாக அமைந்து விட்டது.
எனினும் இந்தக் கூட்டு நடவடிக்கை, இந்தியாவின் தன்னாட்சியை மேம்படுத்தும் நோக்கில்தான் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.