ஆயுதங்களின் மூலம் கொள்ளை, மோசடி ஆகியவை கடலில் எங்கு நடந்தாலும் அதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன், இந்தியக் கடற்படையினர் கடற்கொள்ளையரின் கப்பலை மூழ்கடித்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடற்கொள்ளைக்கு எதிராக வலுவாகப் போராடுவது குறித்து சோமாலியாவில் உள்ள தற்காலிகக் கூட்டணி அரசு, சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்து அமைப்பு, நேசநாடுகள் கூட்டமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு தரப்புடன் தான் தொடர்ந்து பேசி வருவதாக கூறியுள்ளார்.
"சோமாலியக் கடற்பரப்பில் இந்தியா தனது கடற்படையினரை நிறுத்தியுள்ளதையும், உறுப்பு நாடுகள் தங்களின் கடற்படையை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி அப்பகுதியின் கடல் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதையும் பான் கி-மூன் பாராட்டியுள்ளார்." என்று ஐ.நா. பேச்சாளர் கூறினார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆஃப்ரிக்க முனை, ஏடென் வளைகுடா பகுதி ஆகிய நீர்ப்பரப்புகளில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவையில் சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்து அமைப்பு இந்தவார இறுதியில் விளக்கவுள்ளது.
ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் கீழ் சோமாலியாவிற்கான உணவு உதவிகளுடன் செல்லும் கப்பல்களுக்கு நெதர்லாந்து கடற்படையினர் முழுமையான பாதுகாப்பு தருகின்றனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.