பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவது பொறுத்துக் கொள்ள முடியாதது என அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அத்துமீறிய தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை பாதிப்பதாகவும், அதனை உடனடியாக அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் அயலுறவு அமைச்சகம் தனது நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் அனி-பேட்டர்ஸனிடம் வலியுறுத்தியுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து பேசிய கிலானி, இதுபோன்ற தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அவை பொறுத்துக் கொள்ள முடியாதவை. நம்முடைய கஷ்டங்களை அவை மேலும் அதிகரிக்கின்றன என்றார்.
ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவுடன் பாகிஸ்தான் மறைமுக உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுவதையும் கிலானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து கிலானி பேசுகையில், பல உறுப்பினர்கள் அமெரிக்காவுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதுபோன்ற எந்த உடன்பாடும் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் அரசு செய்து கொள்ளவில்லை. முன்னாள் அதிபர் முஷாரஃப் ஆட்சிக் காலத்தில் அதுபோன்ற உடன்பாடுகள் எதுவும் செய்து கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் அயலுறவு அமைச்சகம், அரசிடம் இல்லை என்றார்.