இலங்கையில் சிறிலங்க ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் கடும் போர் காரணமாக வீடுகளை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து திரட்டி அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து உணவு மற்றும் மருந்துகள் அடங்கிய 1,600 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கடந்த திங்கட்கிழமை கொண்டு வரப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக சனிக்கிழமை வன்னிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இன்று நிவாரணப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் கையளிப்பர் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்திய தூதர் ஆலோக் பிரசாத் சந்தித்து நிவாரண பொருட்களை துறைமுகத்திற்கு வெளியே கொண்டு வருவதற்கான நடடிவக்கைகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.