உலகளாவிய அளவில் தற்பொழுது ஏற்பட்டுவரும் பொருளாதார பின்னடைவைச் சரிகட்ட எடுக்கப்படும் முடிவுகளில் இந்தியாவின் கருத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் கூறியுள்ளார்.
டெல்லியில் பி.டி.ஐ. செய்தியாளருக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், “இன்றுள்ள பொருளாதார சூழலில் எந்த ஒரு நாடும் வளர்ச்சியை உறுதிப்படுத்திக்கொள்ள இந்தியாவுடன் வெறும் வர்த்தக உறவை மட்டுமே வளர்த்துக்கொள்வது பயனளிக்காது, மாறாக, அந்நாட்டில் முதலீடு செய்து அதனுடன் ஒரு கூட்டாளியாவதன் வாயிலாக மட்டுமே எதிர்ப்பார்த்த பலனைப் பெற முடியும்” என்று ஜெர்மன் தூதர் பெர்னாட் முயட்சல்பர்க் கூறியுள்ளார்.
இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை தடுத்து நிறுத்த புதிய விதிகள் வடிவமைக்கப்படும் போது அம்முடிவில் இந்தியாவிற்கு முக்கிய இடமளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள பெர்னாட், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், பிரிக் (பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா) நாடுகளின் பங்கேற்பு மிக மிக அவசியமாகிறது, அவர்களின் குரல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், ஏனெனில் உலக பொருளாதாரத்தை மறுவடிவம் செய்வதில் அவைகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன என்று கூறினார்.
இந்தியா, சீனாவின் சந்தைகள் தற்பொழுது வீழ்ச்சியைச் சந்தித்தாலும், அவைகளின் பொருளாதார அடிப்படைகள் பலமாக உள்ளதால், விரைவில் அவைகள் புத்துணர்வு பெறும் என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் மிக வலிமையான பொருளாதாரமாக கருதப்படும் ஜெர்மனி, உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் தங்களது பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.