சோமாலியக் கடற்பரப்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கடற்கொள்ளையரின் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
ஏடென் வளைகுடா பகுதியில் பயணிக்கும் நமது கப்பல்கள் அடிக்கடி கடற்கொள்ளையரின் தாக்குதல்களுக்கு இலக்கானதை அடுத்து, அதைத் தடுப்பதற்காக இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். தாபர் என்ற ஆயுதக் கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோமாலியக் கடற்பரப்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.என்.எஸ். தாபர் செவ்வாய்க்கிழமை அன்று கடற்கொள்ளையரின் கப்பல் ஒன்றைத் தாக்கி மூழ்கடித்துள்ளதாக தலைநகர் புது டெல்லியில் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் கடற்கொள்ளையர் நடத்திய தாக்குதலை ஐ.என்.எஸ். தாபர் முறியடித்து இந்தியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாத்தது குறிப்பிடத்தக்கது.