ரஷ்யாவில் சமீபத்தில் விபத்துக்குள்ளான K-152 நெர்ப்பா என்ற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்படாது என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரஷ்ய அரசின் நாளிதழான ‘ரோஸிஸ்கயா கசெட்டா’வில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் படி அமுர் கப்பல் கட்டுமானப் பிரிவில் 650-780 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வடிவமைக்கப்பட இருந்த நெர்ப்பா ரக அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை, தேசிய ஆயுத கொள்கையின் கீழ் ரஷ்யாவே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவ தலைமை ஜெனரல் நிகோலாய் மகாரோவ் தெரிவித்துள்ளார்.
நெர்ப்பா ரக அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் பணியை கடந்த 1991இல் ரஷ்ய துவக்கினாலும் போதிய நிதியின்மை காரணமாக அப்பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து 12 ஆயிரம் டன் கொள்ளளவு உள்ள அகுலா-2 என்ற நெர்ப்பா ரக நீர்மூழ்கியை வடிவமைத்து அதனை 10 ஆண்டு கால குத்தகைக்கு வழங்க இந்தியா சார்பில் ரஷ்யாவுக்கு 650 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டதால், நீர்மூழ்கி கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கின.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக வடிவமைக்கப்பட்ட அணு சக்தி நீர்மூழ்கியை வெள்ளோட்டம் நடத்திப் பார்க்கும் போது ஏற்பட்ட விஷவாயுக் கசிவு காரணமாக 20க்கும் அதிகமான ரஷ்ய கடற்படை வல்லுனர்கள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு அக்கப்பலை குத்தகைக்கு விடும் முடிவை ரஷ்யா மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.