ஹெலிகாப்டர்களின் சூட்டாதரவுடன் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்த 6 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவிற்கு அருகில் கிழக்கு நாயாறு பகுதியில் 7 படகுகளில் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியினர் மீது சிறிலங்காக் கடற்படையின் சிறப்புப் படகு அணியினர் இன்று அதிகாலை கடும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் கடற்புலிகளின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் அதிலிருந்த 6 கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடற்படையினரின் தாக்குதலிற்கு ஆதரவாக விமானப் படை ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் கடற்படையினரிடம் இருந்து தப்பிச்சென்ற விடுதலைப் புலிகளின் 4 படகுகள் தாக்கப்பட்டதாகவும் கடற்படை கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் தங்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும் கடற்படை கூறியுள்ளது.
கடற்படையினருடன் சண்டையில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் குழுவைக் குறிவைத்துத் தாங்கள் தாக்குதல் நடத்தியதாகச் சிறிலங்கா விமானப் படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார கூறினார்.
இது குறித்துத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.