விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரியை கைப்பற்ற நடந்த மோதல்களில் 8 அதிகாரிகள் உட்பட 54 சிறிலங்க படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 350 பேர் காயமடைந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாவது :
பூநகரியை சுற்றிவளைத்த சிறிலங்க படையினரின் நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தினர். இதில் படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்தனர்.
பூநகரி பகுதியில் கடைசி ஒரு நாள் நடைபெற்ற மோதல்களில் 8 அதிகாரிகள் உட்பட 54 படையினர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தனர் என்று மங்கள சமரவீர கூறியுள்ளார்.
இதுகுறித்து, சிறிலங்காவின் படைத்துறை பேச்சாளரிடம் ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்டபோது, படை நடவடிக்கை எனில் இழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளதுடன் இதனை நிராகரிக்கவில்லை என்று புலிகள் ஆதரவு இணையதளம் புதினம் செய்தி வெளியிட்டுள்ளது.