பாலு: இந்தோனேஷியாவின் சுலவேஷி தீவுப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், அடுத்த சிறிது நேரத்திலேயே அது விலக்கிக் கொள்ளப்பட்டது.
அந்நாட்டின் வன்டாங் கிராமத்தில் வீடு இடிந்ததில் 56 வயது முதியவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாகவும், அக்கிராமத்தில் மட்டும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு இடர் நிவாரண மைய அதிகாரி ருஸ்டம் பகாயா தெரிவித்துள்ளார்.
இதேபோல் மத்திய சுலவேஷி மாகாணத்தில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக ஆளுநர் பளியுஜா கூறியுள்ளார். அப்பகுதியில் 2 பேர் காயமடைந்தனர்.
புவோல் மாவட்டத்தில் 700 வீடுகளும், சுலவேஷி தலைநகர் பலுவில் 500 வீடுகளும் சேதமடைந்துள்ளன. புவோல் மாவட்டத்தின் தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.