இந்தியாவையும் இதர வளரும் நாடுகளையும் பாதிக்கும் சர்வதேச அளவிலான பொருளாதாரப் பின்னடைவை உந்தித்தள்ள ஒருங்கிணைந்த நிதி உந்துதல் திட்டத்தைச் செயல்படுத்த உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையில் கூட்டப்பட்டுள்ள ஜி-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு வளரும் சந்தை நாடுகள் காரணமல்ல என்றாலும், நெருக்கடியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக அவை உள்ளன." என்றார்.
வளரும் நாடுகளின் தேவைகளுக்குப் பதிலளிக்கக் கூடிய வகையிலும், நம்பிக்கையை மீட்டமைக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியைக் கையாள்வது குறித்த தெளிவாக அறிகுறிகளை உலகிற்கு நாம் நிச்சயம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான கண்காணிப்பு முறை மற்றும் ஒழுங்குமுறையில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்றார்.
முதலீட்டாளர்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த உலகளவிலான வர்த்தகத் தளர்வு, தாராள நிதி வாய்ப்பு ஆகியவற்றைப் பரிந்துரைத்த பிரதமர், உலகளவிலான வர்த்தக முறையை வலுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வளரும் நாடுகளுக்கான கடன் அடிப்படையிலான ஏற்றுமதியை விரிவுபடுத்துவதன் மூலம் வளரும் நாடுகள் தங்களின் வர்த்தக முதலீடுகளைப் புதுப்பித்துக்கொள்ள தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளால் உதவ முடியும் என்றார் அவர்.
இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7- 7.5 விழுக்காடாகக் குறைந்து விட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், அடுத்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம், உலகளவிலான பொருளாதார நெருக்கடி எவ்வளவு விரைவில் சீரடைகிறதோ அதைப் பொறுத்தே அமையும் என்றார்.
வளர்ச்சி குறைவதனால் வளரும் நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர். கல்வி, உடல்நலம், சத்துணவு ஆகிய அனைத்திலும் அவர்கள் பற்றாக்குறையைச் சந்தித்துப் பாதிப்படைகின்றனர் என்ற பிரதமர், இந்தப் பாதிப்பை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றார்.
"பிரண்டன்வுட் நிதி அமைப்புகள் என்று அழைக்கப்படும் பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்.), உலக வங்கி ஆகியவற்றை, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நாடுகளின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நிதியமைப்புகளாக மறுசீரமைப்புச் செய்ய இம்மாநாடு முன்வர வேண்டும்.
உலகளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவை தடுத்து நிறுத்தி, பொருளாதாரத்தை சர்வதேச அளவில் உந்தித் தள்ள தாங்கள் அளித்துள்ள ஒருங்கிணைந்த நிதி உந்துதல் திட்டத்தைச் செயல்படுத்த உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும்" என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.