ஐக்கிய அரபு குடியரசைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று ஈராக்கில் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்தியர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.
சார்ஜாவைச் சேர்ந்த பிரிட்டிஷ் கல்ஃப் இன்டர்நேசனல் என்ற விமான நிறுவனத்தின் கிளை துபாயில் இயங்கி வருகிறது. இதில் ஜெயச்சந்திரன் அப்புகுட்டன் என்ற 44 வயதான இந்தியர் உட்பட 6 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் 6 பேரும் தங்களின் நிறுவனத்திற்குச் சொந்தமான உக்ரேனிய தயாரிப்பான ஏ.என்.12 விமானத்தில் சரக்குகளுடன் அன்பார் மாகாணத்தில் ஃபாலுஜா என்ற இடததிற்கு அருகில் உள்ள அல் அசாத் விமானத் தளத்தில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாதிற்கு புறப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை காலை 10.45 மணிக்குப் புறப்பட்டுள்ள ஏ.என்.12 விமானத்தின் ரேடியோ சிக்னல் ஒரு மணி நேரத்திற்குள் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் விமானம் ஈராக் எல்லைக்குள் விழுந்து நொறுங்கிவிட்டது தெரியவந்தது.
இந்த விபத்தில் ஜெயச்சந்திரன் அப்புகுட்டன் உள்ளிட்ட 6 பேரும் பலியாகிவிட்டதாகக் கருதப்படுகிறது. விபத்திற்குள்ளான விமானத்தின் பாகங்களைக் கண்டுபிடித்துள்ள அமெரிக்கப் படையினர், உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.