விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரியைச் சிறிலங்காப் படையினர் கைப்பற்றியுள்ளதை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளமான பூநகரிக்குள் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினர் சனிக்கிழமை காலை நுழைந்துவிட்டதாகவும், இலங்கைத் தீவின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான முக்கிய முன்நகர்வு இது என்றும் சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிறிலங்கா அரசுத் தொலைக்காட்சியில் (Sri Lankan Broadcasting Corporation) SLBC) பேசிய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச, "இன்று காலை எங்களின் படையினர் பூநகரியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் பாதை திறக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைந்து பேச்சிற்கு வருமாறு அழைக்கிறேன். அப்படி அவர் ஆயுதங்களை கீழே வைத்தால் அது வடக்கில் வாழும் மக்களுக்குச் செய்கின்ற பெரிய உதவியாக இருக்கும்." என்று கூறியுள்ளார்.