Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொருளாதார உந்துதல் திட்டம் ஏற்கப்படும் என இந்தியா எதிர்பார்பு!

Advertiesment
பொருளாதார உந்துதல் திட்டம் ஏற்கப்படும் என இந்தியா எதிர்பார்பு!
, சனி, 15 நவம்பர் 2008 (16:55 IST)
அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை அடுத்து உலகளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவை தடுத்து நிறுத்தி, பொருளாதாரத்தை சர்வதேச அளவில் உந்தித் தள்ள தாங்கள் அளித்துள்ள ஒருங்கிணைந்த நிதி உந்துதல் திட்டத்தை ஜி20 மாநாடு ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்பதாக இந்தியா கூறியுள்ளது.

வாஷிங்டனில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அளித்த விருந்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருடன் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரண்டன்வுட் நிதி அமைப்புகள் என்று அழைக்கப்படும் பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்.), உலக வங்கி ஆகியவற்றை, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நாடுகளின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நிதியமைப்புகளாக மறுசீரமைப்புச் செய்ய இம்மாநாடு முன்வர வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொள்ளும் என்று கூறினார்.

உலகப் பொருளாதாரத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பின்னடைவை தடுத்து நிறுத்திட இந்தியா முன்வைத்துள்ள மூன்று முக்கிய யோசனைகளில், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இதற்கு மேலும் தங்களுக்கு வசதியான தற்காப்புக் கொள்கைகளை கடைபிடிக்க கூடாது என்பது முக்கியமானதாகும்.

இன்றுள்ள நிலையில், பொருளாதாரப் பின்னடைவு இதற்கு மேலும் மோசமாகாமல் தடுக்க ஒரு புதிய நிதிக் கட்டமைப்புத் தேவை என்பதும் இந்தியாவின் யோசனைகளில் ஒன்றாகும் என்று அலுவாலியா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil