இந்தியாவுடனான இருதரப்பு நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்த மிகுந்த முக்கியத்துவம் தருவேன் என்று அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா உறுதியளித்துள்ளார்.
வாஷிங்டனில் நடந்த உலகளவிலான பொருளாதார நெருக்கடி குறித்த இந்திய- அமெரிக்க உயரதிகாரிகள் சந்திப்பில் ஒபாமா இந்த வாக்குறுதியைத் தந்துள்ளார்.
முன்னதாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளைத் தனது சார்பில் சந்திப்பதற்காக ஒபாமா நியமித்துள்ள குழுவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் லீச், முன்னாள் அமெரிக்க அமைச்சர் மேடெலெய்ன் ஆல்பிரைட் ஆகியோரை இந்தியத் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா இந்தியத் தூதர் ரோனன் சென்னுடன் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது சர்வதேச அளவில் தற்போதுள்ள நிதி நெருக்கடி, பொருளாதாரச் சரிவு, ஜி-20 மாநாடு, இருதரப்பு உறவுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தியா உடனான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்த முக்கியத்துவம் தருவேன் என்று பாரக் ஒபாமா உறுதியளித்துள்ளார் என்று ஆல்பிரைட் தெரிவித்தார் என்று இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.