வசிரிஸ்தான் பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 13 தீவிரவாதிகள் பலியாகி உள்ளதாகவும், இதில் பெரும்பாலானவர்கள் அரபு நாட்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் வசிரிஸ்தான் பகுதியில் வாலாதீன் புடர்ன் என்ற கிராமத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் வீசிய 4 ஏவுகணைகள் அமீர் குல் என்பவரின் வீட்டில் விழுந்து வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர், இதில் பலர் அரபு நாட்டவர்கள் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியதாகத் தொலைக்காட்சி செய்திகள் கூறியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் முதல் வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்தியுள்ள 19 ஆவது ஏவுகணைத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.