பொருளாதார பின்னடைவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளுக்கு உலக வங்கி அளித்துவரும் மென்மைக் கடன் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.
வாஷிங்டனில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கையில் செய்தியாளர்களுடன் பேசிய நிதியமைச்சர் சிதம்பரம், இன்றைய நிலையில் உலக பொருளாதார வளர்ச்சியை உந்துத் தள்ளும் சில நாடுகளில் இந்தியாவும், சீனாவும் முதன்மையானவை. எனவே வளரும் பொருளாதார நாடுகளுக்கு குறைந்த வட்டியில் அளிக்கும் கடன்களை (soft loans) உலக வங்கியின் நிதி நிறுவனங்கள் அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கு உதவ தற்பொழுது 3 பில்லியன் (300 கோடி) டாலர்கள் வரை உலக வங்கியின் மறுசீரமைப்பு-மேம்பாடிற்கான பன்னாட்டு வங்கியும் (International Bank for Reconstruction and Development - IBRD), பன்னாட்டு மேம்பாட்டு முகமை (International Development Agency - IDA) ஆகியன உதவி வருகின்றன. இந்த நிதியுதவி பெரும் அளவிற்கு அதிகரிக்கப்படவேண்டும் என்று சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.
பன்னாட்டு நிதியம் (International Monetary Fund -IMF) உள்ளிட்ட அயல் அமைப்பு நிதியுதவிகளை சார்ந்திருக்கும் நிலையில் இந்தியாவின் நிதி நிலை இன்று இல்லை, எனவே உலக வங்கியின் நிதி அமைப்புக்களின் உதவி இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மிகவும் அவசியமானது என்று கூறிய அமைச்சர் சிதம்பரம், அப்படிப்பட்ட மென்மையான கடனுதவிகளின் மூலம் மட்டுமே வேலை வாய்ப்பையும், வருவாயைப் பெருக்கிடும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் போன்ற மேம்பாட்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்த முடியும் என்று கூறினார்.
“நிதிச் சந்தைகளும் உலகப் பொருளாதாரமும்” என்ற மையப் பொருளில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியாவின் பிரதமரும், நிதியமைச்சரும், தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவை சமாளிக்க பன்னாட்டு அளவில் தற்காலிகமானதொரு பொருளாதார நிதி அமைப்பை உருவாக்குவது அல்லது பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து போதுமான நிதியைப் பெற்று தற்பொழுதுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பது என்ற என்ற பரிந்துரையை முன்வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
தற்போது ஏற்பட்டுள்ளது போன்று மீண்டும் ஒரு பொருளாதார குளறுபடி ஏற்பட்டு நிதி நெருக்கடி உண்டாகாமல் தடுக்க உலகளாவிய கண்காணிப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறிய சிதம்பரம், அப்படிப்பட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை செய்யுமானால், இப்படிப்பட்ட பின்னடைவுகளை முன்ன்றிந்து தடுத்திட முடியும் என்றார்.
வாஷிங்டனில் நடைபெறும் ஜி20 மாநாட்டைப் பொறுத்தவரை இந்தியா மூன்று முக்கிய பிரச்சனைகளி்ன் மீது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவுள்ளது, அதனை நமது பிரதமர் விவரித்துப் பேசுவார் என்று கூறிய சிதம்பரம், அவைகள்: 1. அனைத்து நாடுகளின் நலனையும் உள்ளடக்கிய பன்னாட்டு நிதி அமைப்பு; 2. வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்காமல், மாறாக உறுதி செய்வதாக அது இருத்தல் வேண்டும்; 3. தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளும் நிதி, வணிக மனப்போக்குகள் தலைதூக்காமல் தவிர்த்தல் ஆகியன இந்தியா முன்மொழியப் போகும் வழிமுறைகள் என்றார்.
தற்பொழுது நிலவும் உலக பொருளாதாரச் சூழல் தற்காப்பிற்கு உகந்தது அல்ல என்ற சிதம்பரம், மூதலீடுகள் பெரும் அளவி்ற்கு வருதலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் சேவைகளும் பெரும் அளவிற்கு (ஏற்றுமதியின் வாயிலாக) பாய்தலும் அவசியமானவை என்றார்.
இப்படிப்பட்ட பொருளாதார பின்னடைவை தவிர்க்க பன்னாட்டு அளவில் ஒரு ஒழுங்குமுறை (Regulator) அமைப்பு பயன்படாது என்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சிதம்பரம், இன்றுள்ள தேவை பன்னாட்டு அளவிலான தரமும் (Global Standard), தேச அளவிலான ஒழுங்குமுறையும்தான் சரியாக இருக்கும் என்றுத் தான் கருதுவதாகக் கூறினார்.
இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முன் வைக்கும் ஆலோசனைகளில், அந்நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவின் கருத்துகளும் உள்ளடங்கியதாக இருக்கும் என்றும் சிதம்பரம் கூறினார்.