பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் விடுதலை கேட்டுப் போராடி வரும் தாலிபான்கள், அரசுடன் அமைதிப் பேச்சு நடத்தத் தயார் என்று மீண்டும் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாண பழங்குடியினர் பகுதிகள், நாட்டின் இதரப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் வகையில் அரசுடன் பேச்சு நடத்தத் தீவிரவாதிகள் விரும்புகின்றனர் என்று தெஹ்ரிக்- இ தாலிபான் பாகிஸ்தான் இயக்கத்தின் பேச்சாளர் மெளல்வி ஒமர் கூறியுள்ளார்.
வன்முறை யாருடைய நலனிற்கும் நல்லதல்ல என்பதன் அடிப்படையில், பேச்சு நடத்துவதில் தாலிபான்கள் உறுதியாக இருப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தாலிபான்கள் எப்போதும் தங்களின் ஆயுதங்களைக் கைவிட்டதில்லை. ஆனால் பேச்சின் வெற்றியைப் பொறுத்து ஆயுதங்களைக் கீழே வைக்கவும் தயாராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே ஒருமுறை தாலிபான்கள் விடுத்த பேச்சுவார்த்தை கோரிக்கையைப் பாகிஸ்தான் அரசு நிராகரித்துவிட்டது.
தாலிபான்கள் தங்களின் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு வந்தால் மட்டுமே பேச்சு நடத்துவது பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறியிருந்தார்.