சூயஸ் கால்வாய்ப் பகுதியில் இந்திய வர்த்தகக் கப்பலைக் கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை நமது கடற்படையினர் விரட்டியடித்தனர்.
சூயஸ் கால்வாய் அருகில் உள்ள ஆடென் வளைகுடாப் பகுதியில் செல்லும் இந்திய வர்த்தகக் கப்பல்கள் தொடர்ந்து கடற்கொள்ளையரின் தாக்குதல்களுக்கு இலக்காகி வந்தன. இதையடுத்து அக்டோபர் 23 ஆம் தேதி முதல் அப்பகுதியில் நமது கடற்படையினரின் ரோநதுப் பணிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மும்பையில் உள்ள கிரேட் ஈஸ்டர்ன் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த 38,265 டன் சரக்கு சுமக்கும் திறனுள்ள எம்.வி. ஜக் அர்னாவ் என்ற வர்த்தகக் கப்பல் சூயஸ் கால்வாயைக் கடந்து கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது விசைப் படகுகளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை வழிமறித்துக் கடத்த முயன்றனர். இதைடுத்துக் கப்பல் ஊழியர்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பியதுடன், கடற்படைக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் சூயஸ் கால்வாய்ப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.என்.எஸ். தபார் என்ற இந்தியப் போர் கப்பலில் இருந்த கமாண்டோ படையினர் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடற்கொள்ளையரின் கடத்தல் முயற்சியை உரிய நேரத்தில் முறியடித்தனர்.
ஆடென் வளைகுடாவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், ஐ.என்.எஸ். தபார் சம்பவ இடத்தில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.