பிரதமர் மன்மோகன் சிங்கின் வளைகுடா நாடுகள் பயணத்தின் போது, கத்தார் நாட்டுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும், ஓமன் நாட்டுடன் எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க வழிவகுக்கும் முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளன.
ஐ.மு.கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக கத்தார், ஓமன் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் (நவம்பர் 8-10) சென்றார்.
இதில் கத்தார் நாட்டுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடல் பாதுகாப்பு, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பான புலனாய்வு மற்றும் விசாரணைத் தகவல்கள் பரிமாற்றம், பண மோசடி, போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றைக் கண்டறிந்து தடுப்பதில் ஒத்துழைப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
மேலும், அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைச் சமாளிக்கும் வகையில் தங்களுக்குக் கூடுதலாக 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயுவைத் தர வேண்டும் என்று இந்தியா தரப்பில் கத்தார் நாட்டிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கத்தாரின் யூரியாத் தேவையைச் சமாளிக்க அந்நாட்டில் எரிவாயுவில் இயங்கும் உரத் தொழிற்சாலையை இந்தியாவின் உதவியுடன் அமைப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், "எங்களின் ஒரு மணி நேரச் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. கத்தாரின் துணைப் பிரதமர் அப்துல்லா பின் ஹமாத் அல் அட்டியாஹ் இந்தியாவின் சிறந்த நண்பர். நமது எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுவதாக அவர் உறுதியளித்துள்ளார்" என்றார்.
முன்னதாக, ஓமன் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், உலகப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஓமனின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த தொழில்துறையில் மூதலீடுகளை அதிகரிப்பது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்தியா- ஓமன் இடையில் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான மூதலீடுகளை பல்வேறு துறைகளில் மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
மேலும், ஓமனில் பணியாற்றி வரும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது.