தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்கா அரசு ஒருபோதும் நிறுத்தாது என்று அந்நாட்டின் மூத்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எத்தகைய உடன்பாட்டையும் சிறிலங்கா அரசு செய்துகொள்ளாது என்றும் கூறினார்.
சிறிலங்கா நாடாளுமன்றம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அவைத் தலைவர் வி.ஜே.மு. பண்டார தலைமையில் கூடியது.
அவையின் வழக்கமான பணிகள் முடிவடைந்ததும் துவங்கிய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், சிறிலங்கச் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும், மூத்த கேபினட் அமைச்சருமான (வேளாண்மை மேம்பாடு மற்றும் உழவர் சேவைகள் மேம்பாட்டுத் துறை) மைத்திரிபால சிறிசேன பேசினார்.
அப்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. உறுப்பினர் ரணவீர பத்திரன, "நாங்கள் எப்போதும் போர் நிறுத்தத்தை வேண்டுகிறோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர் பா.நடேசன் கூறியுள்ளார். எனவே அரசும் போர் நிறுத்தம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, நிபந்தனைகள் ஏதுமின்றி ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு வந்தால் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவிதமான பேச்சையும் அரசு நடத்தும் என்று நாங்கள் ஏற்கெனவே கூறியுள்ளோம். அதுவரை பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அரசு தொடர்ந்து நடத்தும்" என்றார்.