ஓமன் நாட்டிற்கு சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஓமன் நாட்டு தொழில் அதிபர்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும், இந்தியாவில் தொழில் துவங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் வளைகுடா நாடுகளில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஓமன், கத்தார் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முதல் கட்டமாக ஒமன் நாட்டுக்கு சென்றார்.
ஓமன் துணை பிரதமர் சயீத் பகத்பின் முகமதுவை அவர் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்கள்.
இந்தியா- ஓமன் இடையே 3 ஒப்பந்தங்களும், கையெழுத்தானது. ஓமனில் பணிபுரியும் 5 லட்சம் இந்தியர்களின் பொருளாதார பாதுகாப்புக்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
பின்னர், ஒமன் நாட்டின் சுல்தான் கப்பாஸ் பின் சையதை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார்.
இதை அடுத்து ஒமன் நாட்டு தொழில் அதிபர்களின் கூட்டத்தில் மன்மோகன் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள், இந்தியாவில் அதிக முதலீடு செய்யுங்கள் என்று ஒமன் தொழில் அதிபர்களுக்கு மன்மோகன்சிங் அழைப்பு விடுத்தார். இந்தியாவுக்கு உரம், இயற்கை எரிவாயு இறக்குமதி பற்றியும் மன்மோகன்சிங் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மஸ்கட் நகரில் இந்திய பிரதிநிதிகளை சந்தித்து விட்டு இன்று மாலை மன்மோகன்சிங் கத்தார் நாட்டுக்கு செல்கிறார்.