இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் 3 பேருக்கு சனிக்கிழமை இரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
2002 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி நடந்த அந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல அயல் நாட்டு பயணிகள் உட்பட 202 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக இமாம் சமுத்ரா, அம்ரோஸி நூர்ஹாஸ்யிம், மற்றும் அலி குஃப்ரான் ஆகிய 3 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த பயங்கரவாதத் தாக்குதலில் 88 ஆஸ்ட்ரேலியர்கள், 28 பிரிட்டானியர்கள், 8 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.
இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால் தலை நகர் ஜகார்த்தாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அலுவலகங்கள், கட்டிட வளாகங்கள், தூதரக அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பல இடங்களில் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூவரின் உடல்களும் ஹெலிகாப்டர் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.