ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், அந்நாட்டின் தற்போதைய பிரதமருமான விளாதிமிர் புதின், அந்நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தற்போதைய அதிபர் மெட்விடேவ் 2009இல் பதவி விலகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் “வெடொமோஸ்டி” நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியில், ரஷ்ய அதிபரின் பதவிக் காலத்தை 4 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும் என்று கடந்த புதனன்று மெட்விடேவ் வலியுறுத்தியுள்ளார். இது, அவரது முதன்மை ஆலோசக அதிகாரியான லடிஸ்லவ் சுர்கோவின் திட்டமாகும்.
அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலம் அந்நாட்டின் அரசியல் சட்டம், மக்களின் எதிர்ப்பைப் பெற்ற சமுதாய சீர்திருத்தங்களில் மாற்றத்தை நடைமுறைப்படுத்தி, அடுத்த அதிபராக புதின் பதவியேற்கும் போது அவர் நீண்ட காலம் (6 ஆண்டுகள்) பதவி வகிக்க மெட்விடேவ் வழி செய்வார் எனக் கூறப்பட்டுள்ளது.