ஜனநாயகம் மலர்ந்துள்ள பூட்டான் நாட்டின் ஐந்தாவது மன்னராக 28 வயதான ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்சுக் இன்று முடிசூட்டிக் கொண்டார். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் முடிசூட்டு விழாவில் பங்கேற்றனர்.
தஷிக்ஹோட்ஸோங் பகுதியில் உள்ள ராஜ அரண்மனையில் நடந்த இவ்விழாவில், அந்நாட்டின் 4வது மன்னரான ஜிக்மி சின்கே வாங்சுக், தனது மகன் ஜிக்மே கேசர் நம்க்யெல்-க்கு (இந்திய நேரப்படி காலை 8.11 மணிக்கு) முடிசூட்டினார்.
மன்னர் ஜிக்மி சின்கேவுக்கு உள்ள 4 மனைவிகளில், மூன்றாவது ராணியான ஆஷி ஷெரிங் யாங்டோனின் மூத்த மகன்தான் பூட்டானின் 5வது மன்னராக முடிசூட்டப்பட்டுள்ளார். பூட்டானில் ஜனநாயகம் மலர்ந்த பின்னர் அந்நாட்டின் முதல் மன்னராக பதவியேற்ற பெருமையையும் ஜிக்மே கேசர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பூட்டான் பிரதமர் ஜிக்மி தின்லே உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த முடிசூட்டு விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.