அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தலைமையில், ரஷ்ய-அமெரிக்க இருதரப்பு உறவுகள் புதிய மலர்ச்சி பெறும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த டிமித்ரி மெட்விடேவ், ரஷ்யா உடனான உறவை முழுவீச்சில் மேம்படுத்துவது குறித்து ஒபாமா தலைமையிலான அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க மக்களுடன் தங்களுக்கு (ரஷ்யா) எந்தப் பிரச்சனையும் இல்லை. அதேவேளையில் அமெரிக்க எதிர்ப்பு நிலையையும் ரஷ்யா கடைபிடிக்கவில்லை என்று குறிப்பிட்ட மெட்வடேவ், ஆயுதப் பரவலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஒபாமா அரசுடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக இருப்பதாக கூறினார்.
அந்நாட்டு தேர்தல் முடிவுகள் மூலம் அயலுறவுக் கொள்கை, ரஷ்யாவுடனான உறவு உள்ளிட்ட பல்வேறு சிக்கலான விவகாரங்களில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் புதிய கோணத்தில் இருக்கும் என ரஷ்ய அயலுறவு அமைச்சர் கிரிகோரி கராசின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்றான ஜார்ஜியா மீது ரஷ்யா படையெடுத்ததுடன், ஜார்ஜியாவில் இருந்து பிரிந்த அப்காஷியா, தெற்கு ஒசேட்டியா ஆகிய பகுதிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுதந்திர நாடுகளாக ரஷ்யா பிரகடனம் செய்தது அமெரிக்காவுடனான இருதரப்பு உறவில் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதேபோல் ரஷ்யாவின் அண்டை நாடுகளான போலாந்து, செக் குடியரசில் நவீன ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை அமெரிக்கா நிறுவியதும் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவில் சிக்கலை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.