இருதரப்பு உறவுகளை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளையும் பாகிஸ்தானுடன் விவாதிப்பதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது என அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ஈரான் சென்றுள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெஹ்ரானில் நடந்த “இந்தியா-ஈரான்: பழங்கால நாகரிகமும் நவீன நாடுகளும்” என்ற கருத்தரங்கை நேற்று துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பாகிஸ்தானில் அமைதி, நிலைத்தன்மை, மேம்பாடு ஆகியவற்றைக் காணவே இந்தியா விரும்புகிறது. அங்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உலகின் அனைத்து பகுதிகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், கடந்த ஜூலையில் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான, உறுதியான உறவுகளை ஏற்படுத்தும் கொள்கைகளை இந்தியா பின்பற்றி வந்துள்ளது. இருதரப்பு உறவுகளை பாதிக்கும் வகையில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தி தீர்வு காணவே விரும்புகிறோம்.
அதேவேளையில், இருநாட்டு மக்களிடையிலான நேரடித் தொடர்புகளையும், பொருளாதாரத் தொடர்புகளையும் மேம்படுத்தவும் இந்தியா விரும்புகிறது. கூட்டுப் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
பயங்கரவாதம் குறித்து அவர் பேசுகையில், உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் விஷயங்களில் பயங்கரவாதம் மிகக் கொடியது. பயங்கரவாதிகள் தங்களின் செயலை மத நம்பிக்கை என்று கூறினாலும், உண்மையாக அவர்களுக்கென்று எந்த மதமும் இல்லை. ஏனென்றால் எந்த ஒரு மதமும் அமைதி, உலக சகோதரத்தன்மை ஆகியவற்றையே வலியுறுத்துகிறது. வன்முறை, மனித உரிமை மீறலை எந்த மதமும் வலியுறுத்தவில்லை எனக் கூறினார்.