வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் சிறிலங்கக் கடற்படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் சிறிலங்கக் கடற்படையினரின் பீரங்கிப் படகும், ஹோவர் கிராஃப்ட் கடற்கலமும் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கக் கடற் படையினரின் 20 டோறா பீரங்கிப் படகுகளுடன் நிலை கொண்டிருந்த அணி மீது இன்று அதிகாலை 5.15 மணிக்கு கடற்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும், தரையிரக்கத் தாக்குதலிற்குப் பயன்படுத்தப்படும் ஹோவர்கிராஃப்ட் கலம் ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் கடற்புலிகள் தரப்பில் 7 கடற்கரும்புலிகள் பலியாகியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், நாகர்கோவில் கடற்பரப்பில் நடந்த மோதலில் விடுதலைப் புலிகளின் 4 படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் கடற்படையினர் 5 பேர் காயமடைந்து உள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.