பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள தீவிரவாதிகளால் மட்டுமே பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்படும், இந்தியாவால் நிச்சயம் அதற்கு பாதிப்பு ஏற்படாது என அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான பராக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானில் அனுபவமில்லாத ஜனநாயக அரசு அமைந்துள்ளது. அவர்கள் முழுமையான ஜனநாயகத்தை அடைய நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அது ராணுவ உதவியாக மட்டும் இருக்கக் கூடாது.
அந்நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்கவும், குழந்தைகளின் கல்வி சிறக்கவும் தேவையான உறுதியான தீர்வுகளை வழங்க வேண்டும். எனவே பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை வழங்குவதற்கே நான் முன்னுரிமை அளிப்பேன்.
மேலும், பாகிஸ்தானுக்கு இந்தியாவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதேசமயம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஆக்கிரமித்திருக்கும் தீவிரவாதிகளால்தான் அந்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும். எனவே, தீவிரவாதிகளை ஒழிப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும். அதன் மூலமே பாகிஸ்தானில் நிலையான அரசை அமைக்க முடியும். அதேவேளையில் ஆப்கானிஸ்தானிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்படும்.