அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பயங்கரவாதம் அனைத்து வகையிலும் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ஜர்தாரி விடுத்துள்ள செய்தியில், குண்டுவெடிப்பில் உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றின் அனைத்து ரூபங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி விடுத்துள்ள மற்றொரு செய்தியில், அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதுடன், இப்பிரச்சனையில் (பயங்கரவாதம்) உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளார்.
அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் மற்றும் அம்மாநிலத்தின் முக்கிய இடங்களில் இன்று மதியம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
அமெரிக்கா கண்டனம்: இதற்கிடையில், குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்ஃபோர்ட், இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ஏற்பட்ட துக்கத்திலும் அமெரிக்க மக்கள் பங்கெடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.