பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், உணவு, மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பாகிஸ்தான் வருவாய் - மறுவாழ்வுத் துறை அமைச்சர் ஜமருக் கான் குவெட்டாவில்
தெரிவித்தார்.
குவெட்டா நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 70 கி.மீட்டரில் இன்று அதிகாலையில் 5 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 6.4 ஆகப் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
அதிகாலை நேரம் என்பதால், மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். பலர் தூங்கிய நிலையிலேயே உயிரிழந்தனர். வீடுகள் இடிந்து விழுந்ததிலும், கட்டிட மேற்கூரைகள் சாய்ந்தும் கிடப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்து பின்னதிர்வுகள் ஏற்பட்டன. இதல் இரண்டாவதாக ஏற்பட்ட நில அதிர்வு மிகக் கடுமையானதாக இருந்ததாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஜிராத் மாவட்டத்தில் அடங்கிய 2 பகுதிகள் முழு அளவில் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அம்மாவட்ட தலைவர் திலாவர் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 1935ஆம் ஆண்டில் குவெட்டாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 75 ஆயிரம் பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.