Publish Date: Wed, 29 Oct 2008 (04:24 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (04:23 IST)
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்க படைதரப்பு தெரிவித்துள்ளது.
தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று இரவு 10.50 மணிக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அதேநேரம், கொழும்பின் புறநகர்ப்பகுதியான களனி திசவில் அமைந்துள்ள அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் இன்றிரவு 11.30 மணி அளவில் விடுதலைப் புலிகளின் வானூர்தி குண்டுகளை வீசியுள்ளது.
விடுதலைப் புலிகளின் வானூர்திக்கு எதிராக சிறிலங்கா படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் வானூர்தியின் தாக்குதலினால் களனி திச மின் உற்பத்தி நிலையம் தீப்பற்றி எரிவதாகவும் அதனை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கொண்டிருப்பதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
வானூர்தி தாக்குதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.