தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை தீபாவளி விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் அமெரிக்கா முழுவதும் இருந்து சுமார் 100 இந்தியர்கள் பங்கேற்றனர். அமெரிக்க வணிகத்துறை அமைச்சர் கார்லோஸ் கலந்து கொண்டு இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
அதிபர் புஷ் வெளியிட்ட செய்தியில், தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளில் இந்தியர்கள் மேலும் செழித்தோங்க வாழ்த்துவதாக தெரிவித்தார்.
இருநாடுகளும் மத சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் கட்டிக் காப்பாற்றுவதாகவும், இந்த நன்னாளில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருகட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய தூதரக மூத்த அதிகாரி ஆர்த்தி கிருஷ்ணா விழாவில் பேசுகையில், கடந்த காலத்தை விட தற்போது அமெரிக்காவும், இந்தியாவும் மிகவும் நெருங்கி வந்திருப்பதாக குறிப்பிட்டார்.
பிரிட்டனில் விழா: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் வெள்ளிக்கிழமை தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.
இந்தியத் தூதர் சிவசங்கர் முகர்ஜி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர்.