மலேசியாவில் பிரதமர் அப்துல்லா படாவியிடம் கடிதம் கொடுப்பதற்காக பிரதமர் அலுவலகம் முன்பு கூடிய 6வயது குழந்தை உட்பட ஹிண்ட்ராஃப் அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவில் பரவலாகப் பேசும் மொழிகளில் மலாய், சைனீஸ், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் தமிழ் உள்ளது. இருந்தாலும், மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் மற்றவர்களுக்கு இணையாக நடத்தப்படுவது இல்லை என்ற குற்றச்சாற்றும் உள்ளது.
இதையடுத்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கூடி தங்களுக்குச் சம உரிமை கேட்டு தடையை மீறிப் பேரணி நடத்தினர்.
இதற்கு ஏற்பாடு செய்திருந்த ஹிண்ட்ராஃப் அமைப்பை சேர்ந்த மனோகரன், கெங்காதர்ஃபன், கணபதிராவ், வசந்த் குமார், உதயகுமார் ஆகிய 5 தலைவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர்கள் 5 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமர் அப்துல்லா படாவியிடம் கடிதம் கொடுப்பதற்காக 6 வயது குழந்தை உள்பட அவ்வமைப்பைச் சேர்நத சிலர் பிரதமர் அலுவலகம் முன்பு கூடினர். அப்போது அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பிரதமர் அலுவலக அதிகாரிகள் அவர்களிடம் கடிதம் பெற மறுத்த நிலையில், அனுமதியின்றி பிரதமர் அலுவலகம் முன்பு கூடியதற்காக காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.