உலக நாடுகளை பீடித்திருக்கும் நிதி நெருக்கடிகளால் மேலும் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை அச்சம் தெரிவித்துள்ளது.
இதனை உலக வறுமை ஒழிப்பு தினமான வெள்ளியன்று ஐ. நா. தெரிவித்துள்ளது.
தற்போது சுமார் 1.4 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள ஐ. நா., உணவு மற்றும் எரிபொருள் விலைகள் வானளாவ சென்றால் மேலும் 10 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
"வறுமையை ஒழிக்கும் நமது பணி மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று ஐ. நா. பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார்.
2015-ற்குள் வறுமையை ஒழிப்பதாக ஐ. நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஏழை நாடுகள் பல இத்திட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தீவிர வறுமை நிலை என்பது நாளொன்றுக்கு 1.25 டாலர்களுக்கும் குறைவான தொகையில் ஒருவர் வாழ்க்கை நடத்துவது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.