சீனா-பாகிஸ்தான் இடையே அணு சக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்தும் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, சீனாவின் உதவியுடன் மேலும் 2 புதிய அணு உலைகளை பாகிஸ்தான் நிறுவ உள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, அதிபர் ஜர்தாரின் சீனப் பயணத்தின் போது பாகிஸ்தானில் புதிதாக 2 அணு உலைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக தெரிவித்தார்.
இதன்படி, அந்நாட்டில் உள்ள சஸ்மா அணு சக்தி வளாகத்தில் 2 புதிய அணு உலைகள் கட்டப்படும் என்றும், அவற்றில் இருந்து 680 மெகாவாட் மின்சாரம் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட சர்தாரியின், 5 நாள் சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவுற்ற நிலையில், அமைச்சர் குரேஷி இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக ஜர்தாரி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதே இருநாடுகளுக்கு இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று வெளியான செய்திகளுக்கு பாகிஸ்தான் அரசு உறுதியான பதில் அளிக்காத நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.