பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியின் குடியிருப்பிலும், இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் அமெரிக்கத் தூதரகத்தை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து “தி நியூஸ் டெய்லி” என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தலிபான்கள் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள பிரிவினைவாதக் குழுக்களுக்கு எதிராக இராணுவம் எந்தவித நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்வதைப் பொறுத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் படைகளை குவிக்க அரசு முடிவு செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க தூதரகம் மற்றும் அதிபர் குடியிருப்பின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் கார் குண்டுகளை பயன்படுத்தலாம் என்றும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.