பாகிஸ்தான் - ஆப்கான் எல்லையில் பாக். ராணுவத்தினருக்கும், தாலிபான் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 47 தீவிரவாதிகள் உட்பட 51 பேர் பலியானதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் வடமேற்கு மாகாணத்தில் சண்டைகள் வலுவடைந்து வருகின்றன. தாலிபான் மற்றும் அல்கய்டா தீவிரவாதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் அப்பகுதியில் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குவாஜகேலா என்ற இடத்தில் நடந்த சண்டையில் 25 தீவிரவாதிகளும் 2 ராணுவ வீரர்களும் பலியானதாக ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மேலும் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான நவாஸ் ஷெரீஃப் வடக்கு அயர்லாந்து அமைதி பேச்சு வார்த்தைகளை உதாரணம் காட்டி தீவிரவாதிகளுடன் உரையாடல் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.