அமெரிக்க பொருளாதார நிபுணர் பால் க்ரூக்மேனுக்கு (Paul Krugman) 2008ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நோபல் பரிசுக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
அமெரிக்காவில் உள்ள லாங் தீவில், ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த க்ரூக்மேன் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டம் பெற்றார். 1977ஆம் ஆண்டில் மாசசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
தடையில்லா வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கலின் விளைவுகள் என்னென்ன? உலகம் முழுதும் நடைபெறும் நகரமயமாதலுக்குப் பின்னணியில் இருக்கும் காரணிகள் எவை என்பன போன்ற கேள்விகளுக்கு க்ரூக்மேன் தருவித்திருக்கும் புதிய கோட்பாடுகளில் பதில்கள் இருக்கின்றன என நோபல் பரிசுக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
பொருளாதார நிபுணரான க்ரூக்மேன் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். புத்தகங்களும் எழுதியிருக்கிறார். தற்போது பிரின்ஸ்டோன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து "தி நியூயார்க் டைம்ஸ்" பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.