இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்க விமானப் படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி அருகில் பரந்தனில் உள்ள குமரபுரம் குடியிருப்பு மீது இன்று காலை 6:25 மணியளவில் சிறிலங்க விமானப் படை விமானங்கள் நான்கு முறை குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் சந்திரா தேவி(50), அவரது மகள் அச்சிகா (10) ஆகிய 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
மேலும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், இன்று காலை 7:15 மணியளவில் முரசுமோட்டை முருகானாந்த மகாவித்தியாலத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறிலங்க விமானப் படை குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.