சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவ பிடிக்குள் சிக்கி தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடி வருவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஈழத் தமிழினம் மீதான சிங்கள அரசின் இன அழிப்புப்போர் என்றும் இல்லாத வகையில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுணர்வுடன் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி குரல்கொடுத்து வருவது துன்பப்பட்டு வரும் எமது மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஈழத் தமிழரை பூண்டோடு ஒழித்துக்கட்டி தமிழரின் தாயக நிலத்தை ஒரு மயான பூமியாக்கும் விருப்புடன் சிங்கள அரசு இன அழிப்புப்போரை தொடுத்துள்ளது. இதற்கு சிங்களத்தின் அனைத்துக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆதரவு கொடுத்துள்ளன. சிங்களப் படைக்கான ஆட்திரட்டலில் அனைத்துச் சிங்களக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள இனம் ஒன்றுபட்டுத் தமிழரை அழித்தொழிக்க படை நடத்தி வருகின்றது.
இந்தப் போர் நெருப்பில் சிக்குண்டு எமது மக்கள் படும் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. குண்டுகள் போட்டு எமது மக்களைக் கொன்று குவிக்கின்றார்கள். குடியெழுப்பிக் கலைக்கின்றார்கள். நிலம் விழுங்கி முன்நகரும் சிங்களப் படைகளிடம் இருந்து உயிர் பிழைக்க எமது மக்கள் நாள்தோறும் இடம்பெயர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். மானத்துடனும் மிடுக்குடனும் வாழ்ந்து வந்த தமிழர்களை ஒரு நாடோடிக் கூட்டம் போல் மரநிழல்களுக்குக்குக் கீழும் தெருவோரங்களிலும் வாழ சிங்கள இனவெறியரசு நிர்ப்பந்தித்துள்ளது.
அவலப்படும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவோ உயிர்கொடுக்கவோ உலகில் எவரும் இல்லையென்ற இறுமாப்புடன் தமிழின அழிப்பை சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒன்று திரண்டு ஒருமித்த உணர்வுடன் தமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது சிங்கள இனவாத அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழினம் நாதியற்ற இனமல்ல. பூண்டோடு அழிப்பதற்கு விட்டில் பூச்சிகளுமல்ல. பெயரோடும் புகழோடும் இந்தப் பூமியில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் ஒரு வீர இனம்.
உலகின் மூத்த குடிகளில் தமிழினமும் ஒன்று. கொடியுடனும் படையுடனும் மாட்சியுடன் வாழ்ந்துவந்த பெருமைக்குரிய தமிழினம் இன்று தனக்கென ஒரு நாடில்லாது தவிப்பது ஒரு வரலாற்றுச் சோகம்.
தமிழர்க்கென்றொரு தனியரசை ஈழ மண்ணில் உருவாக்க உயிர் கொடுத்துப் போராடி வரும் உறவுகளுக்காகக் கடல் தாண்டிக் கரம் நீட்டும் தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வை நாம் நன்றியுடன் பற்றிக்கொள்கின்றோம்.
தமிழ்நாட்டின் உதவி ஈழத் தமிழர்களுக்கு ஒருபோதும் கிடைக்காதென்று சிங்கள அரசு கற்பனையில் மூழ்கியிருந்த வேளையில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் கொதித்தெழுந்து சிங்கள அரசிற்கெதிராகக் கோபத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள்.
சிங்கள அரசு நினைப்பதுபோல தமிழ்நாடு ஒரு சக்தியற்ற மாநிலமல்ல. அது ஆறுகோடி தமிழர்களின் தாய்நிலம். உலகத் தமிழரின் பண்பாட்டு மையம். இந்திய அரசியலில் முக்கிய அரசியல் சக்தியாக திகழும் மாநிலம்.
"தானாடா விட்டாலும் தன் தசையாடும்" என்பதுபோல ஈழத் தமிழர்கள் அல்லற்படும்போதெல்லாம் தமிழ்நாடு தன் உணர்வலைகளை வெளிப்படுத்துவது வழமை. ஈழத் தமிழர்களின் இன்னல்களை போக்க இந்திய மத்திய அரசு உதவவேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.
இத்தகைய அரசியல் சூழலில்தான் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைமைகள் தமிழின உணர்வுடன் ஈழத் தமிழர்களிற்கு ஆதரவு தெரிவித்து ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன. சிங்கள அரசு நடத்தும் இன அழிப்புப்போருக்கு இந்தியாவின் பகைநாடுகள் ஆயுத உதவிகளை கொடுத்து வருகின்றன. உலகிலுள்ள மேலும் சில நாடுகள் சிங்கள அரசிற்கு பொருளாதார உதவிகள் செய்துவருகின்றன. இவ்விதம் உலக நாடுகளின் ஒத்தாசையுடன் சிங்கள அரசு போரை நடத்துகின்றது.
நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவுகளினூடாக பலத்தையும் வளத்தையும் ஒன்று திரட்டி ஈழத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க சிங்கள அரசு முனைகின்றது.
ஆனால், ஈழத் தமிழர்களோ தமது உரிமைக்காகக் கடந்த முப்பது ஆண்டு காலமாக அளப்பரிய தியாகங்கள் செய்து அர்ப்பணிப்புணர்வுடன் விடுதலைக்காகப் போராடுகின்றனர். ஈழத் தமிழரின் சுதந்திரப் போராட்டத்திற்கான ஆதரவையும் உதவிகளையும் எமது உடன்பிறப்புக்களான தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம்.
தொப்புள் கொடி உறவுகளுக்காக நீங்கள் வழங்கும் ஆதரவு தமிழீழ மக்கள் என்றென்றும் தலைநிமிர்ந்து வாழ வழிசமைக்கும். கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்காக காட்டியுள்ள ஒருமித்த ஆதரவுகண்டு ஈழத் தமிழர்களும் எமது விடுதலை அமைப்பும் மகிழ்ச்சி அடைவதோடு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்நாட்டுத் தலைவர்கள் காட்டிவரும் இந்தத் தார்மீக ஆதரவு செயல்வன்மை மிக்க அரசியல் ஆதரவாக முழுமைபெற வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் அவாவாகும்.
இவ்வாறு நடேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.