அமெரிக்கா உடன் இந்தியா அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொண்டதால், இந்திய-ரஷ்ய நட்புறவு பாதிக்கப்படாது என இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், வெளியுறவு செயலருமான எம்.கே.ரஸ்கோத்ரா கூறியுள்ளார்.
மாஸ்கோவில் நடந்த “பல துருவ உலகில் ரஷ்யாவும் இந்தியாவும்” என்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், சோவியத் ரஷ்யா உடைந்ததற்கு பின்னர் சீனாவுடன் ரஷ்யா நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டது. தற்போது இந்தியா அமெரிக்காவுடன் நட்புறவை வளர்த்து வருகிறது. எனவே, இதன் காரணமாக இந்திய-ரஷ்ய உறவுகளில் பாதிப்பு ஏற்படாது என்றார்.
இந்தியா, சீனாவின் வளர்ச்சியால் உலகில் வல்லரசு சக்திகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த 6 நாடுகளிடையே புதிய உறவை ஏற்படுத்துவதுடன், பல துருவ உலகில் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான புதிய நடைமுறையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அமெரிக்க அறிவியல் கழகத்தின் அமெரிக்க, கனடா பிரிவு, தேசிய ஆலோசனைக் கழகம் மற்றும் கவனிப்பு ஆய்வு ஸ்தாபனத்தின் சார்பில் கூட்டாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் பல துருவ உலகில் பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்தும் பணியில் இந்தியா, ரஷ்யாவின் பங்கு குறித்து ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.